Friday, December 26, 2008

காணாமல் போன கனவுகள்

கனவுகள் காணாமல் போகும்
காலைப் பொழுது.
நித்திரை தேவி
முத்திரை பதித்த
இரவுப் பொழுது
இறந்து போன
காலைப் பொழுது.

கண்களுக்கும் தூக்கத்திற்கும்
எலும்புகளுக்கும் சோம்பலுக்குமுள்ள
உறவை முறித்து
என் உறவை நினைத்தேன்.

இன்று எனக்கு ஒரு பொன்னாள்.
ஆம்! இன்று அவள்
பதிலுரைக்கப் போகிறாள்.
நான் வரைந்த
காதல் ஓலைக்கு
இன்று அவள்
பதிலுரைக்கப் போகிறாள்.

அவள் கண்களின்
கர்ப்பத்தில்
காத்திருந்த காதல்
இன்று
பிரவசத்திற்கு தயாராய்.!
நான் இனி
கனவுகளுக்கு மட்டுமே
சொந்தக்காரன்.!
இன்பக் கனவுகளுக்கு மட்டுமே
சொந்தக்காரன்.!

என் கற்பனைக்
குழந்தைகள்
குதிரைகளாய் மாறி
குளம்பு பதித்து ஓட
அதில்
வாள் சுழற்றி வீரம் காட்டும்
பிருதிவியாய் நான்!
சாலையோரம் சலனமின்றி
சம்யுக்தையாய் அவள்.!

கல்லெறிந்தவர் முன்
கழண்டு போக
கள்வர்களில்லை நாங்கள் ...
காதலர்கள்.!
இனி காயங்களும்
எங்களுக்கில்லை
எம்மை தடுப்பவர்க்கே!

இனி
கனவுகளுக்கு மட்டுமே
நாங்கள் சொந்தக்காரர்கள்.!
இன்பக் கனவுகளுக்கு மட்டுமே
சொந்தக்காரர்கள்!

கனவுகளும் கவிதைகளும்
கண்களில் மின்ன
கன்னியின் வரவுக்கு
பதைத்தது நெஞ்சம்.

பதைத்து வந்தவள்
விதைத்த வார்த்தைகள்
வதைத்த வேகத்தில்
சிதைந்தது உள்ளம்.

நான் இனி
கனவுகளுக்கு மட்டுமே
சொந்தக்காரன்.!
காணாமல் போன
கனவுகளுக்கு மட்டுமே
சொந்தக்காரன்.!