Saturday, June 21, 2008

சுழற்சி

பயணம் போகும்
பூமியில்
புழுங்கிக் கொண்டிருக்கும்
ஜீவன்களுக்கு மத்தியில்
நானும்
எவையெவையையோ
தேடிக் கொண்டு ... !

விடைகள் எல்லாம்
விஞ்ஞான விதானத்தின்
விளிம்பில் ...

விஞ்ஞானத்திற்கும்
மெஞ்ஞானத்திற்கும்
மத்தியில்
சமூகம்
அஞ்ஞானத்தில்
விசனப்பட்டுக் கொண்டிருக்கிறது.

விசனத்தில்
விக்கித் தவிக்கும்
இச்சமூக
வியாபரக் களத்தில்
மனிதம் விற்கப்பட்டு
மிருகம் வாங்கப் படுகிறது.
அதுவும்
அஜீரண விலையில் ...!

இங்கே
உணர்வுகள் ஊனங்களாய் .. !
உரிமைகள் ஊமைகளாய் ... !
எனில் ...
விடைகள் எங்கே ... ?

விடியலிலா.. . ?

ஆனால் விடியல். .. ?

இங்கே
அடிமைக் குரலுக்கும்
உரிமைக் குரலுக்கும்
நடுவில்
எத்தனையெத்தனை
தலைமுறையிடைவெளிகள் ... !

எனினும்
சந்தடிச் சாக்கில்
வந்து போகும்
இருள் வான மின்னலென
அவ்வப்போது
மனிதம் விரும்பிகள் ..

இந்த சுதந்திரச் சமூகத்தின்
வசந்த காலங்கள்...!

வற்றாத ஜீவநதி

காதலாய் காலம் செல்ல
குதிரையாய் மனசும் தாவி
காமமாய் காதல் பேசி
பூதமாய் பிரிவை நினைக்க
மாயமாய் பின்னர் உணர்த்தி
போர்வையாய் போன மரபை
சிறிதே விலக்கச் சொல்லி
ஜோதியாய் அறிவை மாற்றி
போதியாய் நகருது ஆறு.!

Wednesday, June 4, 2008

முகம்

இன்முகம் மட்டும் காட்டி
இனிப்பாய் வார்த்தை பேசி
உள்மனம் மூடி வைத்து
கசப்பை அதிலே தேக்கி
விசமாய் கொட்டித் தீர்க்கும்
மனிதராய் பெயர் சொல்லிடும்
எவர்க்குமே சுயமாய் இங்கே
முகமென்று ஒன்று இல்லை!
முகவரி மட்டும் இங்கே
அழகாய் இருந்து விட்டு
உள்ளுறை வார்த்தை யெல்லாம்
அழுக்காய் போன தென்ன ?
குரங்கு கூட்டம் கூட
வஞ்சனை சிறிதும் இன்றி
வனப்புடன் வாழும் போது
மானிடம் மட்டும் ஏன்
வஞ்சனை தாங்க லாச்சு?
சிந்தனை சிறிதும் இன்றி
செயல்பட திறனும் இன்றி
வஞ்சனை ஒன்றை தவிர
மானிடம் வேறறிந்த தில்லை!
வஞ்சனை கொண்ட வர்க்கு
மோதிட எண்ணம் தோன்ற
நேரிடையாய் மோதிக் கொள்ள
சுயமாய் முகமொன்று இல்லை!
சீறிச்சினந்து கொள்ள இவர்
பாம்புமுகம் படைத்தா ரில்லை!
பதுங்கி பாய்ந்து தாக்க
புலிமுகம் கொண்டா ரில்லை!
நிழலாய் கொண்ட முகங்கள்
நிதர்சனமாய் ஆவ தில்லை!
இதனை புரிந்து விடின்

மனிதரில் மிருகம் இல்லை