Friday, May 30, 2008

சப்தமாய் ஒரு மௌனம்

தற்செயலாய்
உன் நினைவு வர
நீ எதிரே நிற்கிறாய்!

நான் எல்லாவற்றையும்
விசாரித்துவிட்டு
உன்னையும் மெல்ல
விசாரிக்கிறேன்.
நீ எப்போதும் போல
மௌனியாய் நிற்கிறாய்!

வார்த்தைகள் பேசாதவற்றை
மௌனம் பேசுமாம்.
எங்கோ படித்திருக்கிறேன்
இங்கே அனுபவிக்கிறேன்.

நீ
எல்லாம் சொல்கிறாய்
உன் ஒற்றை
மௌனத்தால்.

உன் மௌனம்
துரோணரின் சக்கர வியூகம்!
நான் சாதாரண அபிமன்யு!
உடைத்து உள்ளே போனவன்
மீண்டு வரமுடியாமல்..... !


உரக்கப் பேசியவர்கள்
பேச்சுடனே போய்விட
உன்னுடைய
உரத்த மௌனம் -

என்னை உலுக்கிவிட்டதடி !

Tuesday, May 27, 2008

நீங்கா நினைவுகள்.

உனக்கு ஞாபகம் உண்டா .. ?

முன்னும் பின்னுமறியாது
முழுக்க முழுக்கவொரு
புதுவுலகில்
என்னையும்
தொடர்பாய் உன்னையும்
அழுத்தி வைத்த – அந்த
அலுவலக நாட்கள் ...

அலுவலகம் முடிந்து
அவரவர் தான் நீங்க
நீயும் நானும்
எவையெவையோயெல்லாம்
பேசித் தீர்க்க நினைத்த
ஐ.நா பிரச்சனைகள் –

நேரில் பேச முடியாத போதெல்லாம்
தாளில் பேச – பின்னும்
தாளாப் பிரச்சனைகளில்
நம்மை அழுத்திக் கொண்ட – அந்த
அழுத்தமான நாட்கள் ...

இவையெல்லாம்
இன்னும் நினைவில் – இந்த
ஐம்பதாம் வயதிலும் ...!

இப்போது நீ
வந்தால்...
உன்னால்
என்னை அடையாளம்
கொள்ள முடியுமா... ?

மங்கிய விழிகளும் - அதனை
மறைக்கத் துடிக்கும்
மூக்குக் கண்ணாடியும்
நரைத்த முடிகளும்
நைந்து போன நரம்புகளும் -

வயோதிகத்தின் விளிம்பில்
மரணத்தை எதிர்நோக்கி
வாசலில் நின்ற போதும்
நீங்காதிருப்பவை – இன்னும்
நினைவுகள் மட்டுமே...!

Wednesday, May 21, 2008

மனித மீறல்கள்

என்னைக் கொஞ்சம்
அழவிடுங்கள்!
சற்றே தனிமையாயிருக்க – ஒரு
சுற்று விலகியிருங்கள்!
தனியாய் நான்
கொஞ்சம் அழவிடுங்கள்!


அலையடங்கின குளமாய்...!
ஆசையடங்கின ஜடமாய் ...!


அழகற்ற உங்களின்
ஆறுதல் வார்த்தைகளை
தள்ளி வைத்துவிட்டு
என்னைத்
தனியே விடுங்கள்!
நான் கொஞ்சம்
அழவேண்டும்!


அலையடங்கின குளமாய்...!
ஆசையடங்கின ஜடமாய் ...!


என்னுடைய துக்கம்
என்னுள்ளேயே புதைந்திடட்டும்! வெளியே விதைத்து
புதராய் மாறி
என்னையே புதைப்பதைவிட
அது
என்னுள்ளேயே புதைந்திடட்டும்! அதற்காகவேணும் அருகாதீர்!
அமைதியாய்
என்னைக் அழவிடுங்கள்!


அலையடங்கின குளமாய்...!
ஆசையடங்கின ஜடமாய் ...!


உங்களின்
மனிதமற்ற மனங்களும்
நேயமற்ற நிகழ்வுகளும்
என்னைக் காயப் படுத்தியது போதும்!
நடந்து போன நிகழ்வுகளுக்காய்
நிதானமாய் கொஞ்சம்
அழவேண்டும்!

அலையடங்கின குளமாய்...!
ஆசையடங்கின ஜடமாய் ...!


நாங்கள் சந்தோஷித்த போது
துக்கித்த உங்களுக்காக
நீங்கள் சந்தோஷிக்க
நான் துக்கமாய் கொஞ்சம்
அழவேண்டும்!

அலையடங்கின குளமாய்...!
ஆசையடங்கின ஜடமாய் ...!


ஒரு இராம கோயிலுக்காக
ஒரு மசூதியையும்
ஒட்டு மொத்த
மனித நேயத்தையும்
மடிய வைத்த - உங்களின்
மனிதமற்ற செய்கைக்காக
மனதார அழவேண்டும்!

அலையடங்கின குளமாய்...!
ஆசையடங்கின ஜடமாய் ...!


(பின் குறிப்பு: இந்த கவிதை பாபர் மசூதி இடிக்கப் பட்ட போது எழுதப் பட்டது.)

Sunday, May 18, 2008

உடம்பு சரியில்லாத நண்பரும்.., லேடி டாக்டரும் ...!

மெய்யாகிய பொய்
சுட்டெரித்தது
சூரியனை...!

நிலா
காயத்தினை
காதால் பார்த்து
காயம் தேடியது.

நிலவுக் கை
நாடி வருடியதில்
சூரியக் கண் நாணி
சுவர் தேடியது... !

அங்கே
அறையப் பட்டிருந்த
சிலுவையில்
வடிக்கப் பட்டிருந்தது
பூ
தலையில்
இலைக் கிரீடத்துடன் .. கூடவே
கெப்ளர்
எண்ணாலும் எழுத்தாலும்
மெய்ப்பிக்கப் பட்டிருந்தான்!

சூரியனை
சிற்றெறும்பு கடித்த போது
நிலா பக்கத்தில்
நின்று சிரித்தது ..!

சந்தா ரசீதாகியது
மருந்துச் சீட்டு.!

விடை தருகிறேன்

எனக்கென்று நீயும்
உனக்கென்று நானுமாய்
நமக்கு நாமாய்
வகுத்துக் கொண்ட
வாழ்க்கைப் பாதையில்
நீ மட்டும் ஏன்
வழுக்கிப் போய்விட்டாய் ... ?

என் சோகத்தை
என் முகத்தில் பூத்த முட்களும்
பேனா சிந்திய இரத்தங்களுமே
பிரதிபலிக்கின்றனவேயன்றி
உதடுகள்
உச்சரித்ததில்லை .. !
உன் பதிலின்றி
பார்வையின்றி
பூத்து குலுங்க வேண்டிய
இந்த மலர்
முகாரிச் சோகத்திற்குள்
முகம் புதைத்துக் கொண்டிருக்கிறது..!

ஒருமுறை வந்து
முகம் காட்டிவிட்டுப் போ!
உன் கண்கள் குளத்தில்
கவிதை முத்தெடுத்து
காதலோடு தொடுத்து
என் சோகத்திற்குக்
கொடுத்துவிட்டு
என்னை பிரிய
விடை தருகிறேன்!

கவிதை வேதம்.

புவி பார்த்து விழி புணரும்;
மனதில் நுழைந்து கருவாய் தங்கும்;
உயிரின் வாசல் கவிதை பிரசவிக்கும்;
புவி கேட்டு பரவச மடையும்;
கவிதை புரியாதோர் கல்வி யிலாதோர்;
அகம் புரியாது புறம் பேசும்
அகந்தை கொண்ட அறிவிலி மாந்தர்
மனதில் அறைய பிறந்த கவிதை
உலகம் பேச உன்னதம் ஆகும்;
வரி வடிவில் வாழ்ந்து நிற்கும்;
வானம் வந்து வாழ்த்திச் செல்லும்;
வாழ்க்கை வந்து வழக்கை சொல்லும்
பேனா நிமிர்ந்து தீர்ப்பை எழுதும்;
அகந்தை தாங்கும் அறிவிலிக் கூட்டம்
வார்த்தை முன்னே வலு விழக்கும்;
வார்த்தை முன்னே வலு விழந்தோர்
வாழ்க்கை முன்னா நிற்கக் கூடும்.. ?
தீர்ப்பைச் சொல்லும் சிறந்த கவிதை
அரசில் ஏறி ஆட்சி செய்யும்;
செவ்வேல் தாங்கி இராட்சசம் அழிக்கும்;
மனிதம் சிறக்க சிலுவை சுமக்கும்;
குற்றம் தவிர்க்கும் குரானாய் நிற்கும்;
கவிதை புரியும் செந்நிலை அரசில்
மதங்க ளில்லை குலங்க ளில்லை;
மானுடம் மட்டும் மகத்துவ மாகும்;
மானுடம் வாழ வாழ்ந்திடும் கவிதை
நாளைய உலகின் வேதம் வேதம்!