Tuesday, August 19, 2008

வயது வந்தும் வயதுக்கு வராதவள்.

எல்லா மரங்களும்
வஸந்தத்தால்
வாழ்த்தப் பட்ட போது
ஏன் இந்த மரம் மட்டும்
இத்தனை வஞ்சிக்கப் பட்டது...!?!?

இந்த வருடத்திற்கு மட்டும்
ஏன
டிசம்பரில் இத்தனை
நாட்கள்..!?!
பூக்களெல்லாம்
பூபாளக் கச்சேரி செய்ய
பணிக்கப் பட்ட போது ..
ஏன்
இந்த மொட்டு மட்டும்
ஆதங்க ஆவர்த்தனம் பண்ண
சபிக்கப் பட்டது .. !?!?!

எல்லா நார்களுக்கும்
பூக்கள் ஒதுக்கப் பட்டபோது
ஏன்
இந்த நாரில் மட்டும்
முட்கள் தொடுக்கப் பட்டது ... !?!?!

எல்லா கண்களின்
கண்ணீரையும்
ஆனந்தம் வந்து
அழிவித்த போது
ஏன்
இந்த கண்களில் மட்டும்
சோகம்
சுமையிறக்கிவிட்டுப் போனது .. !?!?!
சித்திரை மலர்களெல்லாம்
டிசம்பரிலேயே மலரும்போது
இந்த டிசம்பர் மலர் மட்டும்
சித்திரை பல வந்தும்
ஏன்
மலரவில்லை...!?!?!
எல்லா பயிரகளும்
பருவத்தே பயிரான போது
இந்த பயிருக்கு மட்டும்
ஏன்
பருவம் வரவேயில்லை...!?!?!?!

கவிதை வேதம்.

புவி பார்த்து விழி புணரும்;
மனதில் நுழைந்து கருவாய் தங்கும்;
உயிரின் வாசல் கவிதை பிரசவிக்கும்;
புவி கேட்டு பரவச மடையும்;
கவிதை புரியாதோர் கல்வி யிலாதோர்;
அகம் புரியாது புறம் பேசும்
அகந்தை கொண்ட அறிவிலி மாந்தர்
மனதில் அறைய பிறந்த கவிதை
உலகம் பேச உன்னதம் ஆகும்;
வரி வடிவில் வாழ்ந்து நிற்கும்;
வானம் வந்து வாழ்த்திச் செல்லும்;
வாழ்க்கை வந்து வழக்கை சொல்லும்
பேனா நிமிர்ந்து தீர்ப்பை எழுதும்;
அகந்தை தாங்கும் அறிவிலிக் கூட்டம்
வார்த்தை முன்னே வலு விழக்கும்;
வார்த்தை முன்னே வலு விழந்தோர்
வாழ்க்கை முன்னா நிற்கக் கூடும்.. ?
தீர்ப்பைச் சொல்லும் சிறந்த கவிதை
அரசில் ஏறி ஆட்சி செய்யும்;
செவ்வேல் தாங்கி இராட்சசம் அழிக்கும்;
மனிதம் சிறக்க சிலுவை சுமக்கும்;
குற்றம் தவிர்க்கும் குரானாய் நிற்கும்;
கவிதை புரியும் செந்நிலை அரசில்
மதங்க ளில்லை குலங்க ளில்லை;
மானுடம் மட்டும் மகத்துவ மாகும்;
மானுடம் வாழ வாழ்ந்திடும் கவிதை
நாளைய உலகின் வேதம் வேதம்!