Tuesday, April 8, 2008

நீ ... நான் ... மௌனம் ...


உனக்கும் எனக்கும்
மத்தியில் நிற்கும்
மௌனக் கோட்டை
தகர்த்து
எப்பொழுது என்னை
முழுமையாக
ஆட்கொள்ளப் போகிறாய் ... ?

மனம் அறுத்துப் போகும்
மௌனம் தவிர்த்து
பொய்யாய் கொண்ட
முகத்திரை களைந்து ...
நிஜங்களை எப்பொழுது
நிதர்சனமாக்கப் போகிறாய் ... ?

பதில் தெரியாத
கேள்விகளின்
இருள்மையில் மூழ்கும் நம்மை
நமது மௌனம் ...
சாளர ஓட்டை
நிலவொளியாய்
காத்து நிற்கட்டும் ... !
அதற்காகவேணும் நாம்
மௌனம் கொண்டாடலாம் !

கற்பிதங்கள்



கர்ப்பத்திலிருந்தே தொடங்குகின்றன
நமக்கான கற்பிதங்கள் .....
பிரகலாத போதங்களும்
அபிமன்யு அற்புதங்களும்...!
நாம் கொண்ட கற்பிதங்களும்
துன்பங்களின் முடிவோடு...!
சுயமாய் என்ன கற்றுக் கொண்டோம்
கற்றுத் தருவதற்கு ... ?
வேட்டையாடவும் ...
வேட்டையாடப் படாமலும்
இருப்பதற்கே
எல்லா கற்பிதங்களும் ..
கற்பிதங்களின் விளைவுகளெல்லாம் ..
“ சர்வம் தர்க்கம் மயம்” !

Thursday, April 3, 2008

ஜாடி


அடியில் நீராய்
மனதில் ஆசை ..!
கண்கள் வீச்சில்
கற்கள் போட
காதல் பொங்கி
நிறைந்த வேளை
தாகம் தீர்ந்த
காகமாய் அவள்....
கண்ணீர் மிஞ்சிய
ஜாடியாய் நான்.
(பி.கு: 1991-ஆம் ஆண்டு எரிதழல் என்ற கையெழுத்துப் பிரதியில் வெளியான என் கவிதை. இந்த கையெழுத்துப் பிரதி திருநெல்வேலி, வண்ணார்பேட்டை கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில், திரு. ப.கிருபாகரன் அவர்கள் ஆசிரியராக இருந்து மாதந்தோறும் வெளியிடப்பட்டது.)