Tuesday, July 15, 2008

ஏழை பாரதி

காக்கைக் குருவி எங்கள் ஜாதியடி
பாரதியைக் கற்றுத் தந்தாள் – அந்தப்
பள்ளி ஆசிரியை.
ஏனோ புரியவில்லை
ஏழைச் சிறுவனுக்கு.
விட்டுவிட்டு வீட்டிற்க்கு
வந்தான்
பசித்து வந்தவனுக்கோ
பரிமாறப் பட்டதென்னவோ
பருக்கைகள் மட்டுமே!
புரிந்து கொண்டான் அவன் பாரதியை!
உண்ணும் அளவு ஒன்று
என்பதினால் தானோ அன்று
பாரதி சொன்னான்
காக்கைக் குருவி எங்கள் ஜாதியென்று.!

வாக்காளர்கள்.

பசித்த நேரத்தில்
மட்டுமே வந்து போகும்
நாத்திக பக்தர்களுக்கு
இரத்தின கம்பளம்
விரித்து வரவேற்கும்
கோயில்கள்.

கஷ்டம் தெரிந்தும்
கூடலை இரந்து
கருவைப் பெற்ற
கர்ப்பப்பைகள்.
பிறந்தவன்
நர(க) அசுரன்
என்று தெரிந்திருந்தும்
பூரித்துப் போகும்
பூமா தேவிகள்.!


கிழித்த இடத்தில்
வழிந்த இரத்தம்
விழியில் பட்டு
சிவந்து போனால்
சிம்மாசனம் தூளெனப்
புரிந்த ஊசி
விழியோடு இமையைத்
தைத்த போதும்
சுகித்துக் கொண்டிருக்கும்
சுக போகிகள்.

கண்ணைத் தைத்தவன்
கடவுள் என்று
கோயில் கட்டும்
பெரிய சோழர்கள்!