Monday, March 31, 2008

எஞ்ஞான்றும் புதிது உலகு...


தோட்டத்திலிருந்த
முருங்கை மரக் கிளைகளில்
மேலும் கீழுமாய்
பறந்து விழுந்து பறந்தபடியாய்
முயங்கிக் கொண்டிருந்தன
அந்த ஜோடிக் குருவிகள்....

முந்தைய முட்டையிடலின்
வலிமிகுந்த அனுபவ சாயலோ
அந்த அடைகாத்தலில்
அடைந்த வேதனை
நினைவுகளோ இன்றி
தேவையையே மட்டுமே
குறிக்கோளாய் இருந்தன அவை...

முன்பொரு தடவை
அந்த பெட்டைக் குருவி
முட்டையிடும் அவசரத்தில்
கூட்டையடையும் முன்பே
பறந்து கொண்டிருக்கும் போதே
இட்ட முட்டை
கீழே விழுந்து உடைந்து போனது
அநாவசியமாய்
என் நினைவிற்கு வந்து போனதை
அறியாமல் ஆனந்தமாய்
ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தன...

எஞ்ஞான்றும் புதிது உலகு...
மனித நினைவுகள் தவிர்த்து....

Tuesday, March 18, 2008

வாழ்க்கை

கவிதைக்காய்க் காத்திருந்து
கற்பனைகள் பல செய்து
காகிதத்தில் விதையூன்ற ...

வரிகளுக்கும் வார்த்தைகளுக்குமான
சண்டையில்
நவீன ஓவியமாகிப் போயிற்று...

பார்த்தவன் சொல்லிப் போனான்
அழகான கவிதையாய்
ஓவியமாகியிருக்கிறதென ....

வெறுத்துப் போய்
நிரந்தர ஓவியனானேன்.

Saturday, March 15, 2008

ஞானம் பிறந்த கதை .....

ஒளியும் ஒளியின்மையுமான
பெருவெளியில்
அதனதன் தன்மை நிறுத்து...
காலம் நிறுத்து ...
அதன் தொடர்பாய் ....
வாழ்க்கை வரையறுத்த
வழக்குகள் வலிகொடுக்க...
இனங்கள் பெருக்கி...
பெருக்கிய இனங்கள் மேய்த்து .....
மேய்த்த இனங்களுக்கு
மேய்க்கவும் ... மேய்க்கப் படவும் ...
கற்றுத் தந்து ...
போதமைகளின் நிலையாமையும்
போதங்களின் போதமின்மையும்
இருப்பை கிழிக்க .....
கந்தல் வாழ்க்கை வாழக் காரணம் தேட ....

ஆறாம் அறிவு அட்டர் வேஸ்ட்.

என் கவிதை ....

வாழ்க்கை தன்
வழக்குகளால்
என் சிறகழிக்கும்...
உள்ளேற்றி வைத்த
அக்னிக் குஞ்சு
தன் பங்காய் என்னை
எரித்தொழிக்கும்....
இருப்பினும் ....
எரிந்து விழுந்த
என் சாம்பலிலிருந்தும்
மீண்டும் பிறக்கும்
ஃபீனிக்ஸ் பறவையாய்
என் கவிதை .....