Saturday, June 21, 2008

சுழற்சி

பயணம் போகும்
பூமியில்
புழுங்கிக் கொண்டிருக்கும்
ஜீவன்களுக்கு மத்தியில்
நானும்
எவையெவையையோ
தேடிக் கொண்டு ... !

விடைகள் எல்லாம்
விஞ்ஞான விதானத்தின்
விளிம்பில் ...

விஞ்ஞானத்திற்கும்
மெஞ்ஞானத்திற்கும்
மத்தியில்
சமூகம்
அஞ்ஞானத்தில்
விசனப்பட்டுக் கொண்டிருக்கிறது.

விசனத்தில்
விக்கித் தவிக்கும்
இச்சமூக
வியாபரக் களத்தில்
மனிதம் விற்கப்பட்டு
மிருகம் வாங்கப் படுகிறது.
அதுவும்
அஜீரண விலையில் ...!

இங்கே
உணர்வுகள் ஊனங்களாய் .. !
உரிமைகள் ஊமைகளாய் ... !
எனில் ...
விடைகள் எங்கே ... ?

விடியலிலா.. . ?

ஆனால் விடியல். .. ?

இங்கே
அடிமைக் குரலுக்கும்
உரிமைக் குரலுக்கும்
நடுவில்
எத்தனையெத்தனை
தலைமுறையிடைவெளிகள் ... !

எனினும்
சந்தடிச் சாக்கில்
வந்து போகும்
இருள் வான மின்னலென
அவ்வப்போது
மனிதம் விரும்பிகள் ..

இந்த சுதந்திரச் சமூகத்தின்
வசந்த காலங்கள்...!

No comments: