Wednesday, May 21, 2008

மனித மீறல்கள்

என்னைக் கொஞ்சம்
அழவிடுங்கள்!
சற்றே தனிமையாயிருக்க – ஒரு
சுற்று விலகியிருங்கள்!
தனியாய் நான்
கொஞ்சம் அழவிடுங்கள்!


அலையடங்கின குளமாய்...!
ஆசையடங்கின ஜடமாய் ...!


அழகற்ற உங்களின்
ஆறுதல் வார்த்தைகளை
தள்ளி வைத்துவிட்டு
என்னைத்
தனியே விடுங்கள்!
நான் கொஞ்சம்
அழவேண்டும்!


அலையடங்கின குளமாய்...!
ஆசையடங்கின ஜடமாய் ...!


என்னுடைய துக்கம்
என்னுள்ளேயே புதைந்திடட்டும்! வெளியே விதைத்து
புதராய் மாறி
என்னையே புதைப்பதைவிட
அது
என்னுள்ளேயே புதைந்திடட்டும்! அதற்காகவேணும் அருகாதீர்!
அமைதியாய்
என்னைக் அழவிடுங்கள்!


அலையடங்கின குளமாய்...!
ஆசையடங்கின ஜடமாய் ...!


உங்களின்
மனிதமற்ற மனங்களும்
நேயமற்ற நிகழ்வுகளும்
என்னைக் காயப் படுத்தியது போதும்!
நடந்து போன நிகழ்வுகளுக்காய்
நிதானமாய் கொஞ்சம்
அழவேண்டும்!

அலையடங்கின குளமாய்...!
ஆசையடங்கின ஜடமாய் ...!


நாங்கள் சந்தோஷித்த போது
துக்கித்த உங்களுக்காக
நீங்கள் சந்தோஷிக்க
நான் துக்கமாய் கொஞ்சம்
அழவேண்டும்!

அலையடங்கின குளமாய்...!
ஆசையடங்கின ஜடமாய் ...!


ஒரு இராம கோயிலுக்காக
ஒரு மசூதியையும்
ஒட்டு மொத்த
மனித நேயத்தையும்
மடிய வைத்த - உங்களின்
மனிதமற்ற செய்கைக்காக
மனதார அழவேண்டும்!

அலையடங்கின குளமாய்...!
ஆசையடங்கின ஜடமாய் ...!


(பின் குறிப்பு: இந்த கவிதை பாபர் மசூதி இடிக்கப் பட்ட போது எழுதப் பட்டது.)

No comments: